அதிரடி காட்டிய தவான்- லிவிங்ஸ்டன் ஜோடி... குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப் அணி
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 48வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய அந்த அணி வீரர்களில் தமிழக வீரர் சாய் சுதர்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதன்பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் 62, ராஜபக்சா 40, லிவிங்ஸ்டன் 30 ரன்கள் எடுக்க 16 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் நடப்பு சீசனில் பஞ்சாப் அணி தனது 5வது வெற்றியையும், குஜராத் அணி 2வது தோல்வியையும் பதிவு செய்துள்ளது.