11 ரன்களில் மீண்டும் தோற்ற சென்னை அணி - பேட்டிங், ஃபீல்டிங்கில் சொதப்பிய வீரர்கள்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடினார்.
அவர் 88 ரன்கள் குவித்த நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது.
அந்த அணி பஞ்சாப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில் அம்பத்தி ராயுடு மட்டும் ஒருபுறம் போராடினார். இறுதியாக அவர் 78 ரன்களில் அவுட்டாக மற்றொருபுறம் களம் கண்ட யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
ஏற்கனவே நடப்பு தொடரில் பஞ்சாப் அணியுடனான போட்டியில் சென்னை அணி தோற்றிருந்தது. இந்த தோல்வியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 6 போட்டிகளில் தோற்று தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.