தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் சென்னை அணி - 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
அந்த அணியில் தொடக்க வீரர் பாப் டூபிளிசிஸ் மட்டும் தனியாளாக போராடி 76 ரன்கள் விளாச மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் ரவி பிஷ்னொய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான கே.எல்.ராகுல் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அவர் 42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களை விளாசி 98 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் பஞ்சாப் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சென்னை அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.