போராடி வென்ற பஞ்சாப்.. பிளே ஆஃப் செல்வதில் கொல்கத்தா, மும்பை அணிகளுக்கு சிக்கல்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி போராடி வெற்றி பெற்றது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 45வது லீக் போட்டியில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல இப்போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய கொல்கத்தா பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியில் வெங்கடேஷ் ஐயர் 67 ரன்கள், ராகுல் திரிபாதி 34 ரன்கள், நிதிஷ் ராணா 31 ரன்கள் விளாச 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி சிறப்பான தொடக்கம் கண்டது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 40 ரன்களில் அவுட்டாக, மற்றொரு வீரர் கேப்டன் கே.எல்.ராகுல் ஒற்றை ஆளாக போராடினார். அவர் 67 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஷாரூக்கானின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி அதிகப்பட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.