கமலுடன் இணைந்த பழ.கருப்பையா: அவரது அரசியல் பயணம் தெரியுமா?
மூத்த அரசியல் தலைவரான பழ. கருப்பையா தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கினார் பழ. கருப்பையா. 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட போதும் காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸில்தான் இருந்தார்.
காமராஜரபின்னர் ஜனதா கட்சியிலும் ஜனதா கட்சி பிளவுபட்ட நிலையில் ஜனதா தள் கட்சியிலும் பயணித்தார் பழ. கருப்பையா. ஜனதா தள் கட்சியில் இருந்து விலகி 1988-ல் திமுகவில் அவர் ஐக்கியமானார். அங்கும் சில காலம்தான் இருந்தார்.

பின்னர் வைகோ தலைமையில் திமுக பிளவை எதிர்கொண்ட போது மதிமுக உருவானது. மதிமுகவில் வைகோ தலைமையை ஏற்று செயல்பட்டார் பழ. கருப்பையா. அங்கும் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் சில காலம் அமைதியாக இருந்தார். காரைக்குடி குடிநீர் போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து தாய்வீடான காங்கிரஸுக்கு திரும்பி சிறிது காலம் பணியாற்றினார்.
2010-ல் அதிமுகாவில் இணைந்து 2011 சட்டசபை தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சித்ததால் 2016-ல் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் பழ. கருப்பையா நீக்கப்பட்டார். 2019-ல் கருணாநிதி முன்னிலையில் திமுகவுக்கு போன பழ. கருப்பையா அங்கும் நீடிக்கவில்லை.
திமுக ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என விமர்சித்துவிட்டு வெளியேறினார்.
தற்போது தேர்தல் நேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போகிறார் பழ. கருப்பையா.
முன்னதாக மக்கள் நீதி மய்யத்தை புகழ்ந்து பழ. கருப்பையா பேட்டி கொடுத்திருந்தார். இதனையடுத்து பழ. கருப்பையாவை கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.