‘ஜெயிலுக்கு போக ஆசையா?’ - ரூ.500 இருந்தால் போதும்...!
ஊட்டி, கொலைக்கானல், மூணாறு என சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது போல ஜெயிலுக்கும் சுற்றுலா செல்லும் திட்டம் கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் பொதுமக்களுக்கு சிறைவாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
அதன்படி ஒரு நாள் முழுக்க சிறைச்சாலையில் இருந்துவிட்டு வர ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், பார்வையாளர்கள் இதர சிறைக்கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை எழுந்தது முதல் சிறைக்கைதிகள் என்னென்ன செய்வார்களோ அதையே பார்வையாளர்களும் செய்ய வேண்டும்.பார்வையாளர்களுக்கும் சிறைக் கைதிகளுக்கான ஆடை மற்றும் கைதி எண்ணும் வழங்கப்பட்டு அவர்கள் பிற கைதிகளுடன் சிறை அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சிறைக் கைதிகளுடன் இணைந்து உணவை உண்ண வேண்டும். அவர்களுடன் சேர்ந்து சிறை வளாகத்தில் வேலை செய்ய வேண்டும். பார்வையாளர்கள் வார இறுதி நாள்களில் சிறைக்கு வந்து தங்கினால் அவர்களுக்கு அசைவ உணவு கிடைக்கும்.
இரவில் பார்வையாளர்கள் தங்களுக்கான பாயை வாங்கிக் கொண்டு பிற கைதிகளுடன் தரையில் படுத்து உறங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த தற்போது கர்நாடக அரசின் உத்தரவுக்காக சிறை நிர்வாகம் காத்திருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.