எனக்கு அனுமதியில்லையா...? நடுரோட்டில் படுத்து தர்ணா செய்த பவன் கல்யாண்..!!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் நடுரோட்டில் படுத்து தர்ணா செய்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்றைய முன்தினம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்த போது, சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு நந்தியாலா மாவட்டத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சந்திரபாபு நாயுடு, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் ஒன்றில் இருந்த பொது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஊழல் வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாநில குற்றப் புலனாய்வுத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இம்மனு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தர்ணா செய்த பவன் கல்யாண்
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைது அரசியல் பழிவாங்குதல் செயல் என ஜனசேனா கட்சி தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் தனது கண்டனத்தை ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காவல் துறையினரின் பிடியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் பவன் கல்யாணுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், நிதானமிழந்த பவன் கல்யாண், அவரது ஆதரவாளர்களுடன் நேற்று நள்ளிரவு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்நது அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.