குத்துற ஊசியை பார்த்து பயமா... இதோ வரப்போகுது "ஸ்டிக்கர் தடுப்பூசி"..
உலகளவில் விரைவில் ஸ்டிக்கர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஊசியைப் பார்த்தாலே நம்மில் பலர் தலைதெறிக்க ஓடுவது வழக்கம்.சில நொடிகள் மட்டுமே வலிக்கும் அந்த ஊசியை பார்த்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயப்படாத ஆட்களே இல்லை என்றே சொல்லலாம்.
அவர்களுக்காகவே ஓர் நற்செய்தியை அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனா பரவல் தொடங்கியது முதலே தடுப்பூசி தொடர்பான பேச்சுக்களும், எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் உலகம் முழுவதும் மக்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது.
அதிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவே பலர் பயப்படுகிறார்கள். மக்களை சரிக்கட்டி ஊசி போடுவதற்குள் அரசுகள் திணறித்தான் போகிறது. இந்த நிலையில் தடுப்பூசி வரலாற்றில் புதிய புரட்சி செய்யும் விதமாக சிரிஞ்ச் வடிவிலான ஊசிக்குப் பதில், ஸ்டிக்கர் வடிவிலான தடுப்பூசி குறித்த ஆய்வு தீவிரமாகியுள்ளது.
இதுதொடர்பாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நம்பிக்கையூட்டும் வகையிலான முடிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழக வைராலஜி நிபுணரான டேவிட் முல்லர் உள்ளிட்டோர் அடங்கிய ஆய்வுக் குழு இதுதொடர்பான ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வின் சில முக்கிய முடிவுகளை சயின்ஸ் அட்வான்ஸஸ் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
மருத்துவத் துறையில் இந்த தடுப்பூசி புதிய புரட்சியை ஏற்படுத்தும். ஸ்டிக்கர் வகை தடுப்பூசி மூலம் போட்ட எலிகளுக்கு ஆன்டிபாடி உருவாவது விரைவாக நடந்துள்ளதால் ஊசியைக் கண்டு பயப்படுவோர், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த ஸ்டிக்கர் தடுப்பூசி வரப்பிரசாதமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.