சுத்தியலோடு கிரிக்கெட் விளையாட வந்த ஆஸ்திரேலிய கேப்டன் - என்ன காரணம்?
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் களத்தில் சுத்தியலோடு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கராச்சியில் நடந்து வரும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 148 ரன்களில் சுருண்டது.
Pat Cummins doing some repair works on the pitch. pic.twitter.com/sB5Wy6bpUW
— Johns. (@CricCrazyJohns) March 15, 2022
பின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 97 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்ய பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் ஒருநாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே முதல் டெஸ்டைப் போல இந்த போட்டியிலும் மைதானம் சரியாக இல்லை என புகார் எழுந்தது. அதன்படி நேற்றைய ஆட்டத்தின் பந்துவீச்சாளர்கள் கால் பதிக்கும் இடத்தில் ஆடுகளம் சரிவரவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர்கள் புகார் செய்தனர். இதனையடுத்து நடுவர்கள் மைதான ஊழியரை அழைத்து சரி செய்த பின்னும் திருப்தி ஏற்படவில்லை.
இந்த புகாரில் நேரடியாக களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சுத்தியலை வாங்கி களத்தை அடித்து அதனை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.