பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் திண்டுக்கல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்த பசுபதிபாண்டியன் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் கடந்த 2010 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில், எட்டாவது குற்றவாளியாக நந்தவனப்பட்டியை சேர்ந்த 60 வயதான நிர்மலா தேவியின் பெயரும் சேர்க்கப்பட்டது.
இதனிடையே திண்டுக்கல் இபி காலனி டேவிட் நகர் பகுதியில் நிர்மலா தேவி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்று கொலையாளிகள் அதை பசுபதி பாண்டியன் வீட்டில் போட்டுவிட்டுச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார் நிர்மலா உடல் மற்றும் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்கான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 22 ஆம் தேதி நாளில் தான் நிர்மலா தேவியும் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.