திடீரென தீப்பிடித்த செல்போன்... நடுவானில் விமானத்தில் நடந்த சம்பவம்
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவரின் செல்போன் தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்துறை ஆணையம் வெளியிட்டு அறிக்கையில், அசாம் மாநிலம் திபுர்காரிலிருந்து டெல்லி நோக்கி பறந்த 6E 2037 இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவரின் செல்போன் பேட்டரி அதீத வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக விமானத்திலிருந்த உதவியாளர்களிடம் சக பயணிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விமானத்திலிருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சக பயணிகள் மற்றும் அங்கிருந்த பொருள்கள் ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. அதேசமயம் +விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஸ்மார்ட்போன் விபத்துக்கான கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியாக நிலையில் இதுபோன்ற அசாதாரண சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என கேபின் குழுவுக்கு உரிய பயிற்சி தரப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் மின்னணு சாதனங்கள் தொடர்ந்து தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.