விமானம் தரையிறங்கும் வரை கழிவறையில் சிக்கிய பயணி; குறிப்பு அனுப்பிய ஊழியர்கள் - என்ன நடந்தது..?
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் கழிவறைக்குள் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம்
மும்பையிலிருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானம் ஒன்று பெங்களூரு புறப்பட்டது. பயணம் தொடங்கிய சில நிமிடங்களில் ஆண் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் கழிவறையிலிருந்து திரும்பும்போது கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணி அபாய எழுப்பினார். உடனடியாக அங்கு சென்ற விமான ஊழியர்கள் கதவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் திறக்க முடியாமல் போயுள்ளது.
இதனால் ஊழியர்கள் ஒரு காகிதத்தில் சிறிய குறிப்பு எழுதி கதவு இடுக்கு வழியே உள்ளே அனுப்பினர். அதில் "சார், நாங்கள் எங்களால் முடிந்தவரை கதவைத் திறக்க முயன்றோம். ஆனால், எங்களால் திறக்க முடியவில்லை. பீதி அடைய வேண்டாம், சில நிமிடங்களில் நாம் தரையிறங்கி விடுவோம்.
வருத்தம்
எனவே தயவு செய்து கழிவறை மூடியில் உட்கார்ந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். விரைவில் மெயின் கதவு திறந்ததும் பொறியாளர் வருவார், பயப்பட வேண்டாம்." என்று குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், சுமார் 100 நிமிடங்கள் உள்ளே தவித்த பயணியை பொறியாளர்கள் மீட்டனர். பின்னர் அந்த பயணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த பயணிக்கு முழு பணம் திரும்ப வழங்கப்படும். மேலும் சிக்கிக் கொண்ட பயணிக்கு பயணம் முழுவதும் உதவி வழங்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.