விமான பணிப்பெண் மூக்கை உடைத்த பயணி - அதிர்ச்சியடைந்த சக பயணிகள்
அமெரிக்காவில் விமானப் பணிப்பெண் ஒருவரின் முகத்தில் குத்திய பயணியை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து, கலிபோர்னியாவுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சில தினங்களுக்கு முன் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, பணிப்பெண் ஒருவர் பிசினஸ் கிளாசில் முகக்கவசம் அணியாமல் பயணித்த பயணியிடம் சென்றுமுகக்கவசம் அணியும்படி சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பயணி விமானப் பணிப்பெண்ணை முகத்தில் ஓங்கி குத்தினார். இதில் விமானப் பணிப்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. விமானப் பணிப்பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட பயணிகள், முகத்தில் குத்திய பயணியை பிடித்து வைத்தனர். இதுபற்றி விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக டென்வர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரமாக அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் நின்றதும் அந்த சம்பந்தப்பட்ட பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.