நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திமுக நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது.
21 மாநகராட்சி , 489 பேரூராட்சி மற்றும் 138 நகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வரும் நிலையில் காலை முதலே பெரும்பாலான இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகளும் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், திமுக வெற்றியை அடுத்து சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து ஆடி, பாடி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன்,
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.