விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த கட்சிகள்: எத்தனை கோடி தெரியுமா?
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது நாடாளுமன்ற தேர்தலில் இருந்து கூகுள் மற்றும் அதன் தொடர்புடைய பிற தளங்களில் நிறைய கட்சி சார்ந்த அரசியல் விளம்பரங்களை நாம் கண்டுள்ளோம். அவ்வாறு எத்தனை விளம்பரங்கள் வந்துள்ளன என்றும் இந்தியாவில் அரசியல் விளம்பரங்களுக்காக கட்சிகள் எவ்வளவு செலவு செய்துள்ளது எனவும் கூகுள் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பிப்ரவரி 2019 முதல் இப்போதுவரை அனைத்து கட்சி சார்பாகவும் மொத்தம் 21,504 விளம்பரங்கள் கூகுளில் வந்துள்ளது. அதற்காக இந்திய கட்சிகளும் நிறுவனங்களும் செய்த மொத்த செலவு 59 கோடி50 லட்சத்து 50ஆயிரத்து 750 ஆகும். இவற்றில் தமிழகத்திலிருந்து அதிக அளவில் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது தமிழகத்திலிருந்து அரசியல் விளம்பரங்களுக்கு மட்டும் 24 கோடி 23 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளனர். இவர்களில் பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும் 11, 397 விளம்பரங்கள் அளித்துள்ளன. அக்கட்சி 17கோடி 3 லட்சத்து30 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்துள்ளது. மேலும் அக்கட்சியினர் மே மாதம் 2019 முதம் ஜூலை 2019 வரை அதிக செலவுகள் செய்துள்ளனர்.

அனைத்து கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் செலவுகளை ஒப்பிட்டு பார்த்தபோது பாரதிய ஜனதா கட்சி அதிக அளவில் செலவு செய்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக திராவிட முன்னேற்ற கழகம் 15 கோடி 61 லட்சத்து 11 ஆயிரத்து 750 ரூபாய் செலவு செய்துள்ளனர். இவர்கள் மேலும் 3 கோடி 35 லட்சத்து 71 ஆயிரத்து 750 ரூபாய் கூடுதலாக செலவு செய்துள்ளதாக கூகுள் அறிக்கையில் உள்ளது.
அவர்களுக்கு அடுத்தப்படியாக 4 கோடி 52 லட்சத்து 58 ஆயிரத்து 250 ரூபாய் அதிமுக செலவு செய்துள்ளது. ஐ பேக் நிறுவனம் 59 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் 2 கோடி 93 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சுமார் 11 லட்சமும் மக்கள் நீதி மய்யம் 1,34 ஆயிரத்து 750 ரூபாய் செலவு செய்துள்ளது.
இந்தியாவில் வாழும் 90 கோடி வாக்காளர்களில் 26 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகத் தரவுகள் கூறுகின்றன. இதனால் கட்சிகள் இணையதளத்தை தேர்தல் பிரசார களமாக மாற்றியுள்ளன.
- ஜெயலஷ்மி ராமலிங்கம்