“பும்ராவை அப்பவே ஆர்.சி.பி-ல எடுக்கலாமா என கேட்டேன்; ஆனா கோலி ஏளனமா பேசிட்டாரு...இப்போ பும்ரா” - முன்னாள் வீரர் பேட்டி
ஜஸ்பிரித் பும்ராவை ஆர்சிபிக்கு எடுக்க முயன்ற போது விராட் கோலி ஏளனமாக பேசி மறுத்தார் என முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் கடந்த 26-ந் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதிய நிலையில் அபாரமாக ஆடி சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் வீழ்ந்தது மும்பை அணி.
மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூரு அணிகளும் மோதின.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது ஆர்சிபி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் பஞ்சாப் அணி 19 ஓவர்களிலேயே அசால்டாக வெற்றியை பதிவு செய்தது.
மற்ற அணிகள் 150 ரன்களை கூட டிஃபண்ட் செய்யும் போது, ஆர்சிபி மட்டும், ஒவ்வொரு முறையும் 200-க்கும் மேல் ரன்களை குவித்தும், வெற்றியை ருசிக்க இயலவில்லை.
பெங்களூரு அணியின் பவுலர்கள் எதிரணிகளுக்கு ரன்களை வாரி வழங்குகின்றனர். இதற்கு முக்கிய காரணம் முன்னணி பவுலர் ஒருவர் கூட அணியில் இல்லாதது தான்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை ஆர்சிபிக்கு எடுக்க முயன்ற போது விராட் கோலி ஏளனமாக பேசி மறுத்தார் என முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ 2014-ம் ஆண்டு ஆர்சிபியில் நான் விளையாடிய போது, கோலியிடம் பேசினேன். அப்பொழுது பும்ரா என்ற ஒரு பவுலர் சிறப்பாக செயல்படுகிறார், அவரை அணியில் எடுக்கலாமா என்று கேட்டேன்.
அதற்கு பதிலளித்த விராட் கோலி, என்ன பும்ரா, வும்ரா என ஓவராக புகழ்கிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான் என ஏளனமாக கூறி மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் அற்புதமான ஆட்டக்காரராக உருவெடுத்தார். இன்று உலகின் தலைசிறந்த பவுலராக விளங்கி வருகிறார்” என பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு நெட்டிசன்கள் இணையத்தில் கோலிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.