வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன்... இப்படி நடந்திருக்க கூடாது... பார்த்திபன் வேதனை

Parthiban A R Rahman R. Parthiban Iravin Nizhal
By Petchi Avudaiappan May 02, 2022 03:54 PM GMT
Report

`இரவின் நிழல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவத்திற்கு இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

எப்போதும் வித்தியாசமான முறைகளில் படங்களை எடுத்து கொண்டிருக்கும் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தற்போது  `இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஆசியாவிலேயே நான்லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ள முதல் படமாக வந்துள்ளது.

94 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ளனர். இரண்டு நிமிடம் தொடர்ச்சியாக ஒரு ஷாட் எடுப்பது என்பதே மிகவும் சிரமமான ஒரு செயல். ஆனால் ஒரு திரைப்படத்தை 200 கலைஞர்களை பயன்படுத்தி பல மாத தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு வெற்றிகரமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் முதல் பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. மேடையில் பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மத்தியில் நடந்த கேள்வி பதில்கள் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இதில் பார்த்திபனின் கேள்விக்கு ரஹ்மான் மிகவும் நிதானமாக பதிலளித்தார். 

இதனிடையே இந்நிகழ்வின்போது விழாவில் ரோபோ சங்கர் மைக் கேட்க பார்த்திபன் சற்றே கோபமாகி அவரை நோக்கி மைக்கை வீசி எறிந்ததால் நிகழ்வில் சில நொடிகள் பரபரப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ஏ.ஆர்.ரஹ்மானே பார்த்திபனின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன், ரஹ்மானுக்கு விருது கொடுக்கும் போது அந்த வெள்ளி ஷீல்டு 8 கிலோ இருந்தது. அவர் மேல் அந்த வெயிட் போய் சேர்ந்து விடக் கூடாது என்கிற பதட்டம் இருந்தது.

கை, கால்களில் ஏதோ ஷாக் அடித்த மாதிரி ஒரு உணர்வு. அப்போது கொஞ்சம் நிலை தடுமாறிவிட்டேன். கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் வேலை பார்த்தேன். இதுபோன்ற நிறைய காரணங்களால் நான் செய்யக்கூடாத ஒரு விஷயத்தை செய்துவிட்டேன். வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். இனி சரி செய்து கொள்கிறேன் என என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.