தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதல்வர் பழனிசாமி விவசாய கடன் ரத்து உள்ளிட்ட கவர்ச்சி மிகுந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இச்சூழலில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கில் காலை 11 மணிக்கு தமிழகத்தின் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது.
ஆதலால், மூன்று மாத கால செலவினத்திற்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்த பின் சபாநாயகர் தனபால் தலைமையிலான சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என ஆலோசனை செய்யும். அதன்பிறகு இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றிருக்கும் போது ஒரு லட்சம் கோடியாக தமிழக அரசின் கடன் இருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசின் கடன் சுமை 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்திருக்கிறது. தமிழக வரலாற்றிலேயே அதிக கடன் வாங்கி வட்டி கட்டிய எடப்பாடி பழனிசாமியின் அரசை எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இந்த சூழலில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசின் கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.