சட்டப்பேரவை தேர்தல்: பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?
தமிழகத்தில் திங்கள்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களிலேயே நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்தான் அதிகபட்ச சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மநீம கட்சித் தலைவர் கமலின் பெயரில் மொத்தம் ரூ.176.9 கோடிக்கு சொத்து உள்ளதாம். அதில் ரூ.45 கோடிக்கு அசையும் சொத்துகளும், ரூ.131.8 கோடிக்கு அசையாச் சொத்துக்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வாழ்க்கைத் துணையோ, தன்னைத் சார்ந்தவர்கள் என்றோ யாருமில்லை என்றும், தன் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் பிரமாணப் பத்திரத்தில் கமல் தெரிவித்துள்ளார். அதிக சொத்துகளைக் கொண்டிருக்கும் இரண்டாவது வேட்பாளர் யார் என்றால், அவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்தான். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் மற்றும் அவரது மனைவியின் பெயரில் ரூ.160 கோடிக்கு சொத்துகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, அவரது குடும்ப உறப்பினர்கள் பெயரிலும் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இவை அனைத்தையும் கூட்டிப் பார்த்தால், கமலை விடவும் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துகள் மகேந்திரனுக்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.