சட்டமன்ற தேர்தலில் பிரேமலதா விஜய்காந்த் எங்கே போட்டியிடுகிறார்?
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே தற்போதும் தொடரும் நிலை நிலவி வருகிறது. திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகளை தொடங்க உள்ளன.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தேமுதிக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ராமஜெயவேல் தலைமை வகித்தார். மாநில கலை இலக்கிய அணி அமைப்பாளர் விஜயகண்ணன் கலந்து கொண்டு பேசியது: ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே அவரை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் அறிவழகன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் அரியலூர் ஆனந்தன், ஜெயங்கொண்டம் ஜேக்கப் ஜெராமியஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தலில் உடல்நிலை கருத்தில் கொண்டு விஜய்காந்த் போட்டியிடுவது சாத்தியம் இல்லை என்கிற நிலையில் பிரேமலதா போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.