10ஆம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் பெயில் ஆன மாணவன் - கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்
10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவன் தோல்வியடைந்த அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தேர்வில் தோல்வி
பொதுவாக மாணவர்கள் தேர்வில் வெற்றி பெரும் போது, அவரது பெற்றோர்கள் அவரை கொண்டாடுவார்கள்.
அதேவேளையில், நூறுக்கு சில மதிப்பெண்கள் குறைந்தாலே, சக மாணவர்களுடன் ஒப்பிட்டு தங்களது குழந்தைகளை மன அழுத்தத்திற்கு தள்ளும் பெற்றோர்களும் உண்டு.
பெற்றோர்களின் கடுமையான கண்டிப்புக்கு பயந்து, தேர்வில் தோல்வியை தழுவிய சில மாணவர்கள், விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளது.
இந்நிலையில், தங்களது மகன் தேர்வில் தோல்வியதை பெற்றோர்கள் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் உள்ள பசவேஷ்வர் ஆங்கில வழிப் பள்ளியில், அபிஷேக் சோழச்சகுடா(Abhishek Cholachagudda) என்ற மாணவர் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அபிஷேக் சோழச்சகுடா 600க்கு 200 மதிப்பெண்கள்(32%) மட்டுமே பெற்று, எழுதிய 6 பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளார்.
தேர்வில் அவர் தோல்வியடைந்ததால், அவரது ஏமாற்றத்தைக் கடக்க அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் அபிஷேக்கின் பெற்றோர், அவரது சகோதரி, பாட்டி மற்றும் பிற உறவினர்கள் கலந்து கொண்டனர்.
"நீ தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. நீ எப்போதும் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றிபெறலாம்" என அவரது பெற்றோர் அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
பெற்றோரின் ஆதரவில் நெகிழ்ந்த அபிஷேக், "நான் தோல்வியடைந்தாலும், என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர். நான் மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்" என தெரிவித்துள்ளார்.