பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி - குவியும் பாராட்டுக்கள்: யார் தெரியுமா?
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இன்றுடன் போட்டி நிறைவடைய உள்ளது. இந்தியாவின் சார்பில் பங்கேற்றிருக்கும் வீரர், வீராங்கனைகள் அசத்தலாக விளையாடி பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என இந்தியாவின் பதக்கங்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது.
நேற்றைய ஆட்டத்தின் போது கூட இந்தியாவுக்கு ஒரு தங்கமும் ஒரு வெண்கலமும் கிடைத்தது. பதக்கங்களை வென்று குவித்து இந்திய தேசியக் கோடியை உயர்த்திப் பிடித்து வருகிறார்கள் இந்திய வீர, வீராங்கனைகள்.
இந்த நிலையில், பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் யாதிராஜ். போட்டியின் இறுதி நாளான இன்று பேட்மிண்டன் போட்டியில் சுஹாஸ் யாதிராஜ் பிரான்ஸ் வீரர் லூகாஸை எதிர்த்து களமிறங்கினார்.
21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
சுஹாஸ் யாதிராஜ் உத்திர பிரதேச மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் பாராலிம்பிக்கில் பங்கேற்று பதக்கத்தை வென்றிருப்பது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், உத்திர பிரதேச முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.