பாராசிட்டமால் உட்பட 53 மாத்திரைகள் தரமில்லை - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நாம் பயன்படுத்தும் 53 மாத்திரைகள் தரமற்றவை என மத்திய அரசு நிறுவனத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.
மாத்திரைகள்
இன்றைய காலகட்டத்தில் தலைவலி, சளி, காய்ச்சல் என சிறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் மாத்திரைகளை உண்ணும் பழக்கம் அதிகரித்து விட்டது.
குறிப்பாக பெரும்பாலான மக்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு மருந்துகள் தரமற்றவை என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
சோதனை
இந்திய அரசின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில், பல்வேறு மருந்து நிறுவனங்களின் மருந்துகளை தோராயமாகத் தேர்ந்தெடுத்தும் சோதிக்கும்.
இந்த சோதனையில், சர்க்கரை, உயர் இரத்த அழுத்த மாத்திரைகள் உட்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் 53-க்கும் அதிகமான மருந்துகள் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன.
பொதுவாக மாத்திரைகள் எடுத்தால் சிறிய பக்கவிளைவுகள் இருக்கும். இப்படி தரமில்லாத மாத்திரைகளை உட்கொண்டால் என நடக்குமோ என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வயிற்று பிரச்சனை
வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாப்ட்ஜெல்கள், ஆன்டி ஆசிட் பேன்-டி, பாராசிட்டமால் ஐபி 500மிகி, நீரிழிவு எதிர்ப்பு மருந்து க்ளிமிபிரைடு, உயர் இரத்த அழுத்த மருந்து டெல்மிசார்டன் மற்றும் பல அடங்கும்.
வயிற்று பிரச்சனைகளை சரிசெய்ய பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் PSU ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக் லிமிடெட் (HAL) தயாரித்த மெட்ரானிடசோல் கூட தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளது.
குழந்தைகளுக்கான மாத்திரை
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாக்டீரியா தொற்றை எதிர்த்துப் போராட பரிந்துரைக்கப்படும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெட்டரோவின் செபோடெம் எக்ஸ்பி 50 உலர் சஸ்பென்ஷன் கூட இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளது.
டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் மற்றும் உத்தரகாண்ட் சார்ந்த ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் தயாரித்த ஷெல்கால் மருந்து, கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் வழங்கும் பாராசிட்டமால் மாத்திரைகள் தரமற்றது என தெரியவந்துள்ளது.