மைதானத்தில் ரிஷப் பண்ட் செய்த சேட்டைகள் - சிரித்து மகிழ்ந்த ரசிகர்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்த சேட்டைகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. 

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 29 ரன்களும், ரிஷப் பண்ட் 100 ரன்களும் எடுக்க இந்திய அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய அந்த அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 

இதனிடையே ஆட்டத்தின் போது பண்ட் காட்டிய செயல்கள் கிரிக்கெட் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. ஆட்டத்தின் 60வது ஓவரின் போது பண்ட்-காக டிஃபன்ஸ் ஃபீல்டிங் நிற்கவைக்கப்பட்டிருந்தது. அப்போது சாதூர்யமாக செயல்பட்ட அவர், பந்தை சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் பந்து லெக் சைட்டில் செல்ல, அவரின் பேட் கை நழுவி ஆஃப் சைட்டில் பறந்தது. விட்டிருந்தால் பேட்டே பவுண்டரி லைனுக்கு சென்றுவிடும் என்பது போல களத்தில் இருந்தவர்கள் சிரிப்பு முகத்துடன் இருந்தனர்.

இதேபோல டெஸ்டில் வைட் லைன் பந்துகளை யாரும் தொடமாட்டார்கள். ஆனால் மார்கோ ஜென்சன் வீசிய வைட் லைன்பந்தை வேண்டுமென்றே நகர்ந்து சென்று அடித்த ரிஷப் பண்ட், ரன்னும் ஓடவில்லை. பேட்ஸ்மேனின் கிறீஸுக்குள்ளே சிங்கிள் அடிப்பது போன்று நகைச்சுவை ஏற்படுத்தினார். இதனால் மைதானம் சிறிது நேரம் கலகல என்று இருந்தது. இப்படி ஒரு ரன்னிங்கை பார்த்ததே இல்லை என கமண்டேட்டர்ஸும் சிரித்தனர்.


அதே ஓவரின் 3வது பந்து, ரிஷப் பண்ட்-ன் பேட்டில் எட்ஜானது போன்று சத்தம் கேட்டது. அப்போது பண்ட் சதத்திற்கு அருகில் நெருங்கி இருந்தார். இப்படிபட்ட சூழலில் அவர் அவுட்டாகிவிடக்கூடாது என்று நினைத்த, மைதானத்தில் இருந்த ஒரு பெண்மணி.. மிகவும் பதற்றத்துடன் பிரார்த்தனை மேற்கொண்டார். இந்த நிகழ்வை மைதானத்தின் பெரிய திரையிலேயே காண்பித்தனர். அவர் வேண்டிக்கொண்டதை போன்றே பண்ட்க்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

சொல்லப்போனால் மிகவும் பரபரப்புடன் காணப்பட வேண்டிய 3வது டெஸ்ட் போட்டியை ரிஷப் பண்ட் மிகவும் கலகலவென்று மாற்றினார். விரேந்திர சேவாக்கிற்கு பின்னர், இந்திய ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட்டையும் ரசிக்க வைக்கப்போகும் நபர் ரிஷப் பண்ட் தான் என ரசிகர்கள் கூறி பாராட்டி வருகின்றனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்