அரசியலில் உச்சகட்ட துரோகம் நிகழ்ந்து வருகிறது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “அதிமுக 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முன்னேற்றமான மாநிலமாக கொண்டு செல்வதை உறுதியாக கொண்டுள்ளோம். பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பது மக்கள் மத்தியில் பரவி உள்ளது.
மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். யாருடைய ஆட்சி நல்லாட்சி என்பதற்கு மக்கள் பதில் அளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் சீரான ஆட்சியை கொடுத்திருக்கிறார். ஆகவே அவர் தொடர்ந்து முதலமைச்சராக ஈடுபடுவதை அனுமதித்து ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவருக்கு அந்த வாய்ப்பை அளித்து உள்ளேன்.

அரசியலில் உச்சகட்ட துரோகத்தை அவர்கள் (அமமுக) நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்த உழைப்பின் மூலம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்று வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். திமுகவோடு சேர்ந்து கொண்டு அரசியல் களத்தில், வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல முட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவரவர் கட்சிக்கு சாதகமான பதிலை தான் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இறுதியில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் சொல்லும் பதிலே முடிவானது” என்றார்