பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி? - முழு விவரம்
panguniuthiram2022
பங்குனிஉத்திரம்
By Petchi Avudaiappan
கடவுள் முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். இன்று கொண்டாடப்படும் இந்த பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடைபிடிக்கலாம்.
பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனாக திகழும் முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். மேலும் ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள் தான் என புராணங்கள் கூறுகிறது.
- பங்குனி உத்திரம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்கி விட்டு நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிப்பது சிறந்தது. இத்தகைய நூல்களை படிக்க முடியாதவர்கள் ஓம் சரவண பவ என்னும் மந்திரத்தை சொல்லலாம்.
- இன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல், நலம் பாதிக்கப்பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். மேலும் மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம்.
- வீட்டில் இருந்து கூட பூஜை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து சிறிய அளவில் முடிக்கலாம். இந்த தினத்தன்று திருமண ஓலை எழுதுதல், தாலிக்கு பொன் உருக்குதல், சீமந்தம் செய்தல், புதிய பொருட்களை வாங்குதல், பூ முடித்தல், புதிய சிகிச்சை சொல்லுதல், செடி நடுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், வேலையில் சேருவது, வியாபாரம் தொடங்குவது, புதிய இடத்திற்கு மாறுவது, போர்ப் பயிற்சி மேற்கொள்வது மற்றும் நீர் நிலைகளை உருவாக்குவது போன்ற சுபகாரியங்களை செய்வதற்கு மிகவும் சிறந்த நாளாகும்.
- திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனால், பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
- தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடுகளில் இருக்கும் தம்பதியர் பங்குனி உத்திரநாளில் கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை தம்பதி சமேதராக தரிசனம் செய்தால் ஒற்றுமை மேலோங்கும்.
- அதேபோல் திருமணமான பெண்கள் பங்குனி உத்திர நாளில் புது தாலி மாற்றிக்கொள்வதன் மூலம் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.