கிராம சபை கூட்டம்: கேள்வி கேட்ட விவசாயியை நெஞ்சில் எட்டி மிதித்த ஊராட்சி செயலாளர்!
கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலாளர் நெஞ்சில் எட்டி மிதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்டி உதைத்த விவகாரம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக) தலைமை வகித்தார்.
மேலும் பி.டி. ஓ. மீனாட்சி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அம்மையப்பன் (52) என்ற விவசாயி பேசுகையில் "சுழற்சி முறையில் பிற கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தாதது ஏன்?.
ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி 4 மாதங்கள் ஆகிவிட்டது. ஏன் மீண்டும் ஊராட்சி செயலாளர் இங்கு வந்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் திடீரென எழுந்து, அம்மையப்பனின் நெஞ்சில் எட்டி மிதித்துள்ளார்.
வழக்கு பதிவு
அவரது ஆதரவாளர்களும் அம்மையப்பனைத் தாக்கினர். இதில் அம்மையப்பன் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மக்கள் எதிர்ப்பு காரணமாக கிராம சபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில், ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வன்னியம்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தலின் பேரில், தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.