பாஜக பள்ளப்பட்டியில் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறது: செந்தில்பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டு
பள்ளப்பட்டியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்வதாக திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து உள்ளோம். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செந்தில்பாலாஜி ”பாஜகவிற்கு ஆதரவாக வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் 4ஆம் தேதியோடு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். பிஜேபி வேட்பாளருடன் 10க்கும் மேற்பட்ட கார்களில் சென்று வருகின்றனர். இதை கண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை.
கரூரில் தேர்தல் அலுவலர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளோம்.

தற்போது வெளியான கருத்து கணிப்பு அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ளதாகவும் கரூரில் உள்ள 4 தொகுதியில் திமுக வெற்றி பெறும். அரவக்குறுச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். 4 தொழிற்சாலை கொண்டு வரப் போவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்.
பிஜேபி ஆட்சியில் தமிழகத்தில் இதுவரை எத்தனை தொழிற்சாலை வந்துள்ளது.
விலைவாசி பற்றி கவலை இல்லாத அரசாக பிஜேபி உள்ளது. பிஜேபியின் பொய் வாக்குறுதியை மக்கள் நம்புவதாக இல்லை” என கூறினார்.
மேலும், பள்ளப்பட்டியில் பிளவை ஏற்படுத்த பிஜேபி முயற்சி செய்தது. அவர்களின் வன்முறை அறவக்குறிச்சி தொகுதியில் எடுபடாது என்றார்.