பல்லடம் 4 பேர் படுகொலை விவகாரம்....முக்கிய குற்றவாளிகள் கைது
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
பல்லடம் கொலை வழக்கு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வரும் 47 வயதான செந்தில் குமாரின் வீட்டின் முன்பு நேற்று முன் தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்ட நிலையில், அதன் காரணமாக ஆத்திரமடைந்த அக்கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் போது, தடுக்க சென்ற செந்தில் குமாரின் தம்பி மோகன்ராஜா, அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த சம்பவத்தின் விசாரணையில் ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமாருக்கும், 34 வயதான வெங்கடேஷ் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.