ஈரோடு இடைத்தேர்தல்; கூட்டணி கட்சிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை தொடர்பாக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தீவிரம் காட்டும் அதிமுக
அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் சூழலில் பரப்புரையை தீவிரப்படுத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை தென்னரசு நேற்று தொடங்கினார்.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இந்த நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன் அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடைபெற்றது.
இதனிடையே, அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. பழனிசாமி தலைமையிலான அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் 40 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.