பழனி கோவில் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம்..!
பழனி கோவில் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பழனி சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற வணிகர் சங்கத்தின் சார்பாக 33 லட்சம் ரூபாய் மதிப்பில் பழனி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்சிஜன் மையத்தை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் மூலம் ஒருமணி நேரத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள் வரை பயனடைவர் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி,பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார்,கோட்டாட்சியர் ஆனந்தி மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.