பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு
பழனி கோயில் நில விவகாரத்தை வைத்து அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளதுடன், முதலமைச்சர் கூறியபடி, அரசு தூய்மையாக செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பழனி கோயில் நிலம் தொடர்பான புகார்கள் குறித்து அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், இடமாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளரின் இடத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த அதிகாரி, நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விவரம் தெரியாமல் பதிவை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
பின்னர் தகவல் கிடைத்ததும், நிலப் பதிவைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கோயில் நிலம் மீட்கப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விடமாட்டோம்
சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தனது உறவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பொய்யானது என்றும், அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.
தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், "ஒரு இஞ்ச் கோயில் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்றும் அவர் தெரிவித்தார்.