அழகெல்லாம் முருகனே .. விண்ணை தொட்ட அரோகரா முழக்கம் : சிறப்பாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு
முருகனின் 3வது படைவீடான பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது . காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது அப்போது, ஹெலிக்காப்டர்கள் மூலம் கோபுரங்களுக்கும் பக்தர்களுக்கும் மலர் தூவப்பட்டது.
பழனி கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் என பலரும் பங்கேற்றனர்.
மேலும் பழனி கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடினர் முன்னதாக நேற்று முன்தினம் படிப்பாதை, கிரிவல வீதியில் உள்ள கடம்பன், இடும்பன், மயில்கள், அகஸ்தியர் உள்ளிட்ட கோயில்களில் நன்னீராட்டு விழா நடந்தது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகருக்கு திருக்கல்யாண வைபவமும், தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி எழுந்தருளும் வைபவமும் நடைபெறும்.