புறநோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர் - பரபரப்பு வீடியோ!
பழனி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு டோக்கன் வழங்குவதற்கு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகள் அதிகளவில் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
பழனி அரசு மருத்துவமன புறநோயாளிகளுக்கு காலை 6மணி முதல் 11மணி வரை மருத்துவம் பார்க்க படுகிறது. 11மணிக்கு மேல் வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவம் பார்ககப்படும். சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகள் தங்களது பெயரை பதிவு செய்து டோக்கன் பெற்றால் மட்டுமே மருத்துவரிடம் சிகிச்சை பெறமுடியும்.
இதனால் அதிகாலை முதலே பழனி அரசு மருத்துவமனையில் டோக்கன் வழங்கும் இடத்தில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் காமராஜ் என்ற ஊழியர் நோயாளிகளிடம் முன்பதிவு டோக்கன் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் இல்லாததால் தான் ஏழை மக்கள் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர்.அப்படிப்பட்ட சூழலில், ஏழை மக்களை வற்புறுத்தி லஞ்சம் வாங்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.