காதிலிருப்பதை அறுப்பவன் அ.தி.மு.க.காரன், காதோடு அறுப்பவன் தி.மு.க.காரன் - பழ.கருப்பையா
கோவை ராஜவீதியில் மக்கள் நீதி மய்யத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் பழ.கருப்பையா கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசினார். அந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது - பா.ஜ.வின் 'பி டீம்' என்பது, உண்மையிலேயே தி.மு.க. மட்டும்தான். வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டார்.
அப்போது, காலியாக இருந்த இடத்தில் உள்ளே நுழைந்தார் கருணாநிதி. மருமகனை மந்திரியாக்கினார். கடைசி நேரம் வரை, அந்தப் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, அதன் பிறகே காங்கிரசோடு கூட்டணியில் சேர்ந்தார். இப்போது, இ.பி.எஸ். அந்த இடத்தை காலி செய்தால் அங்கு ஸ்டாலின் போய்விடுவார். தங்களிடம் இருக்கும் எம்.பி.க்களை காண்பித்து ஏழெட்டு அமைச்சர் பதவிகளையும் வாங்கி, '2ஜி'யில் செய்த ஊழலை விட, '5 ஜி'யில் பெரிய ஊழலை செய்து விடுவார்கள். தேர்தல் வந்தால், 'தி.மு.க.வில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்கள் என்கிறார் ஸ்டாலின்.
தன் மனைவி அதிகாலை பூஜை, அர்த்தஜாமப்பூஜை செய்வதாகச் சொல்கிறார். தேர்தல் வந்தால், அவருக்கு இதெல்லாம் தேவைப்படுகிறது. ஈ.வெ.ரா., சமாதியிலிருந்து எழுந்து வந்து, அவரை அடித்திருப்பார். அவரது சமாதியை வீரமணி பூட்டி வைத்திருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தொடைக்கறி தி.மு.க.வுக்கு; எலும்புக்கறி அ.தி.மு.க.வுக்கு. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அது அப்படியே மாறிவிடும்.
இரண்டு கட்சியினரும், ஒப்பந்தம் போட்டு கொள்ளையடிக்கிறார்கள். சாராய ஆலை வைத்துள்ள 10 பேரில், ஐந்து பேர், தி.மு.க.வினர் ஐந்து பேர், அ.தி.மு.க.வினர்.
இ.பி.எஸ். அரசு நீடிக்க முக்கிய காரணம் தி.மு.க. - எம்.எல்.ஏ.,க்கள். காதிலிருப்பதை அறுப்பவன் அ.தி.மு.க.காரன்; காதோடு அறுப்பவன் தி.மு.க.காரன்.
இவ்வாறு அவர் பேசினார்.