ஒரு மாசம் ரெஸ்ட்.. சண்டைக்கு வர மாட்டோம் : தாலிபான்கள் அறிவிப்பு
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தாலிபான்கள் ஒரு மாதத்துக்கு சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தெஹ்ரீக்-இ-தாலிபான் சுருக்கமாக பாகிஸ்தானி தாலிபான் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தது. பாகிஸ்தானி தாலிபான்களை ஒடுக்க முடியாமல் பிரதமர் இம்ரான்கான் அரசு திணறியது.
இந்த சூழலில் பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை பிடித்தது.
இதை தொடர்ந்து தாலிபான்களின் உதவியோடு பாகிஸ்தானி தாலிபான்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்தார். அதன்படி தாலிபான்களின் மத்தியஸ்தத்தில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு மாத காலத்துக்கு முழுமையான சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நேற்று முதல் அமலுக்கு வந்த இந்த சண்டை நிறுத்தம் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.