இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர்
டி20 உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இப்போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதில் வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனால் கடும் எச்சரிக்கை விடுத்த ஐசிசி, கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
மேலும் பாகிஸ்தான் விளையாடாது என அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை எனவும் ஐசிசி தெரிவித்தது.
இந்நிலையில் தங்களுடைய முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு களத்தில் அரசியல் இருக்கக்கூடாது என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 15ஆம் திகதி அன்று கொழும்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ போட்டி திட்டமிடப்பட்டுள்ளது, ஒருவேளை பாகிஸ்தான் விளையாடாமல் போனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
