இந்தியாவை விட பாகிஸ்தான் வலிமையான அணியில்லை - சொந்த அணியை விமர்சித்த பாக். வீரர்!
இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே பல கிரிக்கெட் வீரர்கள், இந்த அணிகள்தான் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும் இந்த அணிதான் உலகக் கோப்பையை வெல்லும் என்றெல்லாம் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான அணி என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாக்கர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
வலிமையான அணி இல்லை
அவர் கூறியதாவது "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மிகப் பெரிய ஆட்டம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மற்ற போட்டிகளை விடவும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
அகமதாபாத்தில் விளையாடும்போது இரண்டு அணிகளுக்குமே அழுத்தம் என்பது இருக்கும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை. அகமதாபாத்தில் ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில் அவர்களுக்கு மத்தியில் விளையாடுவது இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகளுக்குமே அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அணியின் செயல்பாடுகளை வைத்துப் பார்த்தால் நிச்சயமாக பாகிஸ்தானை விடவும் இந்திய அணி சிறப்பாக உள்ளது.
நசீம் ஷா இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பெரிய இழப்பு. ஹாசன் அலி மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனுபவம் நிறைந்தவர் என்றாலும் திடீரென சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எளிதானதாக இருக்கப் போவதில்லை" என்று வாக்கர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.