இலங்கையை சேர்ந்தவர் அடித்து, உயிருடன் எரிப்பு : ''இது வெட்கக்கேடான நாள் '' இம்ரான் வேதனை

pakistan srilankan factoryworkerdeath
By Irumporai Dec 05, 2021 07:42 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்தவரை ‘தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான்’ கட்சியினர் கொடூரமாக தாக்கி உயிருடன் எரித்து கொன்ற காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு  உலகளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தை களங்கப்படுத்துவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.

இதில் சம்பந்தப்பட்டவர்களை அங்குள்ள மத தீவிரவாதிகளே அடித்து கொடூரமாக கொல்லும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அதிகமாகி வருகிறது.

சமீபத்தில் லாகூர் அருகே பிரதான இந்து கோயில் அடித்து சேதப்படுத்தப்பட்டு, இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதே போல், நேற்று முன்தினம் இலங்கையை சேர்ந்தவர் அடித்து, எரித்து கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியல்கோட்டில், தனியார் ஆடை நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா தியவதனா (40) பணியாற்றி வந்தார். இவர் தனது தொழிற்சாலையின் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரை நேற்று முன்தினம் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார்.

அந்த போஸ்டரில் குரான் சம்பந்தப்பட்ட வாசகங்கள் இடம் பெற்று இருந்ததால், அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு, அவரை கொடூரமாக தாக்கியது. பின்னர், சாலையில் அவரை உயிருடன் தீ வைத்து எரித்து, மத கோஷங்களை எழுப்பியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு முக்கிய காரணமான 13 பேர் உட்பட 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்  இது பற்றி இம்ரான் கான் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

இலங்கையை சேர்ந்தவரை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்து, உயிருடன் எரித்து கொன்றது பாகிஸ்தானுக்கு வெட்கக்கேடான நாள். இந்த விசாரணையை நானே கண்காணித்து வருகிறேன். இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், என்று கூறியுள்ளார்.