பாகிஸ்தானில் மதுபானம் வைத்திருந்ததாக பிரதமர் இம்ரான்கான் மனைவியின் மகன் கைது
பாகிஸ்தானில் காரில் மதுபானம் வைத்திருந்ததாக பிரதமர் இம்ரான்கானின் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக உள்ள இம்ரான் கான் பிரிட்டனை சேர்ந்த ஜெமீமா கோல்டுஸ்மித் என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிட்டதட்ட 9 ஆண்டு மண வாழ்க்கைக்கு இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றனர். பின்னர் பிரிட்டன் - பாகிஸ்தான் செய்தியாளரான ரேஹம் கானை திருமணம் செய்த இம்ரான் கான் ஒரே ஆண்டில் அவரையும் பிரிந்தார்.
அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு புஷ்ரா பீவி கான் என்பவரை 3வதாக திருமணம் செய்து அவருடன் இம்ரான்கான் வாழ்ந்து வருகிறார். இதனிடையே புஷ்ரா பீவிக்கு முந்தைய திருமணம் மூலம் பிறந்த மகனான மூசா மனேகா என்பவர் காரில் மதுபானம் வைத்திருந்ததாக கூறி கடாஃபி ஸ்டேடியம் அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் மதுபானம் விற்பதும் அருந்துவதும் சட்டவிரோதமாகும் என்பதால் மூசா மனேகா உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பின் உயர் அதிகாரிகள் உத்தரவையடுத்து அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.