கிரிக்கெட் தொடர் ரத்து: அமெரிக்கா மேல் பழிபோடும் பாகிஸ்தான்
நியூசிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் தொடர்களை ரத்து செய்தது அமெரிக்காதான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. இதில் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி இந்த தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்தது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு மேலும் பேரிடியாக இதே காரணத்தைக் கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்தது.
இதற்கு பின்னால் அரசியல் காரணம் உள்ளதாக பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். தொடர்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பாகிஸ்தானுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டதற்கு அமெரிக்காதான் காரணம் என்று பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படைகளை வாபஸ் பெற்ற பிறகு, அங்கு தொடர்ந்து கண்காணிக்க பாகிஸ்தான் சிறந்த இடம் என்று அமெரிக்கா கருதியது. எனவே அமெரிக்க தனது ராணுவ முகாம்களை பாகிஸ்தானில் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது நாங்கள் மறுத்து விட்டோம்.அதற்கான விலையை தற்போது கொடுத்து வருகிறோம் எனவும் பவாத் கூறியுள்ளார்.