பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் துப்பாக்கிச்சூடு - ரசிகர்கள் அதிர்ச்சி
நசீம் ஷாவின் பூர்வீக வீட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நசீம் ஷா
பாகிஸ்தான், லோயர் டிர் மாவட்டத்தின் மாயார் பகுதியில் நசீம் ஷாவின் பூர்வீக இல்லம் அமைந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இந்த வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் வீட்டின் பிரதான நுழைவாயில், ஜன்னல்கள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை சேதமடைந்தன. சம்பவம் நடந்தபோது, நசீம் ஷா வீட்டில் இல்லை. அவர், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக ராவல்பிண்டியில் பாகிஸ்தான் அணியுடன் தங்கியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு
வீட்டில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் பயங்கரவாதச் செயலாகத் தெரியவில்லை என்றும்,
நிலத் தகராறு அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.