தோல்விக்கு இது தான் காரணம்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை
மேத்யூ வாட் கொடுத்த கேட்ச்சை ஹசன் அலி தவறவிட்டது தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் திருப்புமுனையாக அமைந்துவிட்டதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களும், ஃப்கர் ஜமான் 55* ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (0), மிட்செல் மார்ஸ் (28), ஸ்டீவ் ஸ்மித் (5), மேக்ஸ்வெல் (7) என முக்கிய வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தனர்.
நீண்ட நேரம் தாக்குபிடித்த டேவிட் வார்னரும் 49 ரன்கள் எடுத்திருந்த போது தனது கவனக்குறைவால வெளியேறினார்.
இதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் - மேத்யூ வேட் கூட்டணி யாருமே எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன் மூலம் நிச்சயம் தோல்வியடையும் என கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணி கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை வந்தது.
முதல் மூன்று ஓவர்களை மிக சிறப்பாக வீசிய ஷாகின் அப்ரிடி போட்டியின் 19வது ஓவரை வீசினார்,
இந்த தொடர் முழுவதும் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாக திகழ்ந்த ஷாகின் அப்ரிடியின் பந்தை அசால்டாக துவம்சம் செய்து ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய மேத்யூ வேட் 19வது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்று கொடுத்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம்,
மேத்யூ வேட் கொடுத்த கேட்சை ஹசன் அலி தவறவிட்டது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாபர் அசாம் பேசுகையில், 'மேத்யூ வாடேயின் கேட்சை தவறவிட்டது ஆட்டத்தின் திருப்புமுனை.
அந்த கேட்சை ஹசன் அலி பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.
புதிதாக வரக்கூடிய பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி ஏற்படும். ஆனால் விளையாட்டில் இப்படி நடக்கத்தான் செய்யும். ஹசன் அலி எங்கள் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர்.
பாகிஸ்தானுக்காக பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.
நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன். ஒவ்வொரு போட்டியிலும் அனைவராலும் சிறப்பாக செயல்பட்டுவிட முடியாது.
நாங்கள் இதில் இருந்து பாடம் கற்றுள்ளோம். அடுத்த போட்டிகளில் அதை நிவர்த்தி செய்வோம். சிறிய தவறுகளால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்டோம்' என்று தெரிவித்தார்.