கார்கில் போர் - பாகிஸ்தானே காரணம்!! 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர்
லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கிலில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது தவறு என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். 3 முறை பிரதமராக பதவி வகித்த இவர் பனமா பேப்பர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி பதவியில் இருந்து விலகினார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இந்த நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதன் பின் நடைபெற்ற பொதுக்குழுவில் ஷெரிஃப் உரையாற்றினார். அப்போது, "மே 28, 1998 அன்று, பாகிஸ்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.
அதன் பிறகு இந்திய பிரதமர் வாஜ்பாய் இங்கு வந்து லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீறி கார்கில் மீது தாக்குதல் நடத்தியது எங்கள் தவறு தான் என தெரிவித்துள்ளார்.
லாகூர் ஒப்பந்தம்
நவாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் 21 பிப்ரவரி 1999 அன்று லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பற்றிய தொலைநோக்குப் பார்வையைப் பற்றி பேசும் இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளில் பெரும் முன்னேற்றத்தைக் குறித்தது.
மேலும், நாங்கள் அணுகுண்டு சோதனை நடத்துவதைத் தடுக்க அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன்வந்தார். ஆனால் நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். ஒருவேளை என் இருக்கையில் இம்ரான் கான் இருந்திருந்தால், அமெரிக்கா வழங்கிய வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பார் எனத் தெரிவித்திருக்கிறார்.