இப்படியே போனால் ஆப்கானில் உள்நாட்டுப் போர் வரலாம்: தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் பிரதமர்
அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியைக் கொடுக்காவிட்டால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராக தலிபான்கள் போராடிவந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததது.
அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் 70க்கும் மேற்பட்டோர் கொண்ட இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர். இதில் அனைவருமே ஆண்கள். பெண்களுக்கு அரசியலில் இடமில்லை என தலிபான்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் மத சிறுபான்மையினருக்கோ, மொழி வாரியான குழுவினருக்கோ அரசாட்சியில் இடம் தரப்படவில்லை. புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஹக்கானிகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் ஊடகத்துக்கு இம்ரான்கான் அளித்த பேட்டியில்: "தலிபான்கள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும், ஆப்கன் மண்னை பிற தீவிரவாத அமைப்புகள் அண்டைநாடுகள் குறிப்பாக பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும்
.
அனைவரையும் உள்ளடக்கிய ஆடசியை நல்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் உள்நாட்டுப் போர் மூள்வதைத் தடுக்க முடியாது. அப்படியேதும் நடந்தால் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு மட்டுமே உகந்த இடமாக மாறும். அது வேதனையான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.