கலையும் நிலையில் இம்ரான்கான் அரசு , பாகிஸ்தானில் முக்கிய ஆளுநர் நீக்கம்

pakistan punjab governorfired
By Irumporai Apr 03, 2022 06:42 AM GMT
Report

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதனையடுத்து, இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.  

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், இம்ரான்கான் அரசை காப்பாற்றிக் கொள்ள 172 வாக்குகள் தேவை. அவருக்கு ஆதரவு அளித்த இரு கட்சிகள் தற்போது எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்துள்ளதால் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 176 எம்பிக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இம்ரான்கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீக்கப்பட்டுள்ளார். இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் ஆளுநர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் புதிய ஆளுநரை தேர்வு செய்யும் பணி பின்னர் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பதவி நீக்கப்பட்ட ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார்.