''ஐயா பிரதமரே"- ட்விட்டரில் சம்பளம் கேட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், நடந்தது என்ன?

imrankhan pakistanembassy
By Irumporai Dec 04, 2021 10:28 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசு, ட்விட்டரில் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.

நேற்றைய தினம் செர்பியாவின் பாகிஸ்தான் தூதரக ட்விட்டர் பதிவுதான். அப்பதிவில், “நாட்டில் பணவீக்கம் உச்சநிலையை தொட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களாகிய நாங்கள் கடந்த மூன்று மாதமாக சம்பளமின்றி வேலை பார்த்து வருகிறோம்.

அதனால் எங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைகூட எங்களால் செலுத்த முடியவில்லை. பள்ளிக்கட்டணம் செலுத்தபடாத காரணத்தால், எங்கள் பிள்ளைகள் பள்ளிகளால் வெளியே அனுப்பப்படுகின்றனர்.

இன்னும் எவ்வளவு மாதங்களுக்கு நாங்கள் உங்களிடம் சம்பளம் பெறாமல் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் இம்ரான் கான்? கட்டணம். இதுதான் புதிய பாகிஸ்தானா?” என்று பதிவிடப்பட்டிருந்தது.

இத்துடன், பாகிஸ்தான் பிரதமரை பகடி செய்யும் விதமாக மியூசிக் வீடியோவொன்றும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டின் பின்னூட்டமாக “மன்னிக்கவும் இம்ரான் கான். எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்றும் மற்றொரு ட்வீட்டும் போடப்பட்டிருந்தது.

இவையாவும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் இவற்றுக்கு எதிர்விணை காட்டத்தொடங்கின. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தூதரகம் சார்பில் அந்தப்பதிவுகள் நீக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், ‘செர்பியாவை சேர்ந்த எங்கள் பாகிஸ்தான் தூதரகத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்கள் யாரோலோ ஹேக் செய்யப்பட்டுவிட்டது. இதிலிருந்து பதிவானவை எதுவும், தூதரகம் சார்பில் பதிவிடப்படவில்லை’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமரின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் மருத்துவர் காலித் இதுகுறித்து தெரிவிக்கையில், “வெளியுறவுத்துறையினர் எங்களுக்கு அளித்துள்ள தகவலின்படி தூதரகத்தின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்