பாகிஸ்தானில் அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் : மக்கள் முடிவு செய்யட்டும் என இம்ரான் கான் பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி கலைத்துள்ள சம்பவம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிய நிலையில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால் அவரது ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்க்கட்சிகளின் எண்ணத்தில் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காசின் கான் மண்ணை அள்ளிப் போட்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என நினைத்த நிலையில் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் உள்ளே போராட்டம் நடத்தின. இதனிடையே நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றிய இம்ரான்கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும், அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்ர்துள்ளார். முன்னதாக தனது ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும். யார் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்று இம்ரான்கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.