20 நிமிடம் தாமதமாகியிருந்தால் என் மூச்சுக்குழாய்கள் வெடித்திருக்கும்: முகமது ரிஸ்வான்
மருத்துவமனைக்கு செல்ல 20 நிமிடம் தாமதமாகியிருந்தால் தனது மூச்சுக்குழாய் வெடித்து பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஸ்வான் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 67 ரன்கள் எடுத்து ரிஸ்வான் அசத்தினார். ஆனால் இப்போட்டிக்கு முன் கடுமையான நுரையீரல் தொற்று பாதிப்பு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரிஸ்வான் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் பின்னர்தான் தெரியவந்தது.
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து திரும்பிய உடனே களமிறங்கி அதிரடியாக ரிஸ்வான் ஆடியது கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து முதல் முறையாக ரிஸ்வான் பேசியுள்ளார். மூச்சு விட மிகவும் சிரமப்பட்டபோது மருத்துவமனைக்கு சென்றதாகவும் அப்போது உடனே சிகிச்சை தரப்பட்டதாகவும் ரிஸ்வான் தெரிவித்தார்.
இன்னும் 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் மூச்சுக்குழாயே வெடித்திருக்கும் என செவிலியர்கள் கூறியதாக ரிஸ்வான் கூறினார்.
துபாய் மருத்துவமனையில் ரிஸ்வானுக்கு சிகிச்சையளித்தது ஒரு இந்திய மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.