லட்சத்தீவை குறிவைத்த பாகிஸ்தான்; 2 தமிழர்களை அனுப்பி முறியடித்த வல்லபபாய் படேல் - மாஸ் சம்பவம்!
லட்சத்தீவை மீட்ட இரண்டு தமிழர்கள் குறித்த வரலாறு நெகிழ்வுடன் நினைவுகூரப்படுகிறது
லட்சத்தீவு
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்றிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இதையடுத்து மாலத்தீவு நாட்டை சேர்ந்த அமைச்சர்கள், ஆளும் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை, அநாகரிகமாக விமர்சித்தனர். அவரின் பயணத்தால் லட்சத்தீவு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். ஏனெனில் மாலத்தீவு முழுவதுமாக சுற்றுலாத் துறையையே நம்பியிருக்கிறது.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய போராக வெடிக்க, தற்போது மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் அந்த நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் லட்சத்தீவை மீட்ட இரண்டு தமிழர்கள் குறித்த வரலாறு நெகிழ்வுடன் நினைவுகூரப்படுகிறது.
வரலாறு
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக லட்சத்தீவில் வசித்தனர். அப்போது அந்த தீவை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சி செய்து, அந்நாட்டு கொடியுடன் ஒரு கப்பல் லட்சத்தீவுக்கு விரைந்தது.
இதுகுறித்து இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு தகவல் தெரியவந்தது . அவர் உடனடியாக மைசூரின் கடைசி திவானும் தமிழருமான ராமசாமி முதலியார், அவரது தம்பி லட்சுமண சுவாமி முதலியாரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சர்தார் படேலின் அறிவுரைப்படி முதலியார் சகோதரர்கள், திருவிதாங்கூர் போலீஸார், மக்களை அழைத்துக் கொண்டு லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்திய தேசிய கொடியை ஏற்றினர்.
இந்திய கடற்படை போர்க்கப்பலும் லட்சத்தீவுக்கு விரைந்து வந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் பிடியில் சிக்காமல் லட்சத்தீவு தப்பியது. இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடியும் தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒருமுறை பகிர்ந்துள்ளார்.
லட்சத் தீவை மீட்ட ஆற்காடு ராமசாமி முதலியார், நீதிக் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அவரது தம்பி மருத்துவர் லட்சுமண சுவாமி முதலியார், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் துணை வேந்தராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.